சிவபெருமானின் அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்று. முப்புரங்களை அழித்த தலம். ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டியருளிய தலம். சுந்தரர் இத்தலத்தை அடைந்தபோது அப்பர் பெருமான் திருத்தொண்டு புரிந்த தலம் என்பதை அறிந்து, தமது காலடிகளைப் பதிக்க அஞ்சி அருகேயுள்ள சித்தவடமடம் சிதம்பரேஸ்வரர் கோயிலில் தங்கினார். அங்கு சுந்தரருக்கு இறைவன் திருவடி தீட்சை அளித்தார். இப்பகுதி தற்போது 'கோட்லாம்பாக்கம்' என்று அழைக்கப்படுகிறது.
திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார், பரசமயம் தழுவிய தமது தம்பி மருள்நீக்கியாருக்கு நல்வழி காட்ட வேண்டி இறைவனுக்குத் திருத்தொண்டு செய்த தலம். கொடிய சூலை நோய் வந்து அப்பர் பெருமான் தமது தமக்கையைத் தேடி வந்தார். அவர் இறைவன் சன்னதிக்கு அழைத்துச் சென்று திருநீறு அளித்தார்.
அதிகை வீரட்டானரை வணங்கி அப்பர் பெருமான் சூலை நோய் நீங்கப் பெற்றார். 'கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என்னும் தமது முதற் பதிகத்தை அப்பர் பாடிய திருத்தலம். அப்பர் பெருமானுக்கும், திலவகதியாருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. அப்பர் உற்சவ விக்கிரகமும் உள்ளது.
மூலவர் மிகப்பெரிய லிங்கத் திருமேனி. 16 பட்டை வடிவ பாணம். மூலவர் பின்புறம் சிவ-பார்வதி மூர்த்தங்கள் சிலை வடிவத்தில் உள்ளன. மூலவர் விமானம் தேர் வடிவத்தில் அமைந்துள்ளது வேறெங்கும் காணாத அமைப்பு. அற்புதமான சிற்பங்களைத் தாங்கிய இந்த கோபுரத்தின் நிழல் கீழே விழாத அமைப்பை உடையது.
சைவ சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' என்னும் நூலை அருளிய மனவாசகங்கடந்தாரின் அவதாரத் தலம். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் இங்குள்ள சமணப் பள்ளிகளை இடித்து அவற்றின் கற்களைக் கொண்டு 'குணபரேச்சுரம்' என்னும் கோயிலைக் கட்டினான். இக்கோயில் சிறிது தொலைவில் உள்ளது.
அப்பர் 14 பதிகங்களும், சம்பந்தரும், சுந்தரரும் தலா ஒரு பதிகமும் பாடியுள்ளனர். கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |